Friday, November 27, 2020

பௌத்தமும் முருகன் தெய்வமும்!

தமிழ்ப் பண்பாடு என்று  அடையாளப்படுத்தப்பட்ட பல கூறுகளும் பௌத்தப் பண்பாடாக உள்ளன என்பதை ஆய்வாளர்கள், அறிஞர்கள் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். இதை போலவே தமிழ்ப்பண்பாட்டோடு அடையாளப்படுத்தப்பட்ட முருகன் என்னும் தெய்வமும் பௌத்த மரபைச் சார்ந்தது என்று நாம் அழுத்தமாக கூறலாம். முருகனுக்குத் தமிழ்ச்சாயம் பூசலாம். ஏனென்றால் பண்டைய தமிழ் மரபு பௌத்தத்தோடு இணைந்திருந்தது. ஆனால், முருகனுக்கு வேறு மதச்சாயத்தைப் பூசமுடியாது.


கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தெங்கநாட்டின் தலைவராக இருந்தவரின் பெயர் "சாத்தன் முருகன்" ஆகும். சாத்தன் என்னும் பௌத்தப் பெயர் முன்னொட்டாக வந்து முருகன் என்பது பௌத்தப்பெயர்  என்று வெளிப்படுத்திவிடுகிறது.


தெங்கநாடு கேரளாவின் ஒரு பகுதியாகும். எனவே, இந்நாட்டின் தலைவர் சாத்தன் முருகன் என்பவர் பௌத்தர் என்று நாம் அறியலாம். மேலும் இச்சாத்தன் முருகன் தனது மகளை வரகுணன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தார். இவ்வரகுணனைப் பற்றி குறிப்பிடும் செப்பேடு வரலாற்றாய்வாளர்களால் "பௌத்தச் செப்பேடு" என்றுதான் அழைக்கப்படுகிறது. இவர் பௌத்த மார்க்கத்தைப் பின்பற்றியவர் என்பதை இச்செப்பேட்டிலிருந்து அறியலாம். ஒரு நிலத்தின் பௌத்தத் தலைவன் தன் மகளைப் பௌத்த அரசனுக்குத் திருமணம் முடித்துள்ளார் என்பதை அறியலாம்.


'சாத்தன் முருகன்' என்னும் பெயர் முருகன் தெய்வம் பௌத்த மரபைச் சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை தெங்கநாடு சார்ந்த கேரள மரபிலிருந்து நாம் மேற்கொள்வதை தமிழ்ப்பௌத்த மரபிலிருந்து அணுகவேண்டும். எனவே முருகன் பௌத்தத் தெய்வமாக தமிழ்ப்பௌத்த மரபில் காணப்படுகிறார் என்பதை நான் அறியலாம்.

No comments:

Post a Comment