Wednesday, January 22, 2020

சாஸ்தாவாகிய அய்யனார் - சிறுகுறிப்பு!



1953 ஆண்டு வெளியான ஒரு சிறுநூலை முன்வைத்து புத்தர் அல்லது சாஸ்தாவின் பெயருக்கு மாற்றுப் பெயராக அய்யனார் என்கிற பெயரும் விளங்கியதை இங்கு கவனத்துக்குட்படுத்த விரும்புகிறேன்.

"ஸ்ரீகுருநாதர் (சாஸ்தா - அய்யனார் - நாதர்) அஷ்டோத்தர சத - நாம ஸ்தோத்ரம் - நாமாவளி" என்னும் நூல் மேற்குறிப்பிடப்பட்ட ஆண்டில் வெளியானது. D.S. பாலசுப்பிரமணிய சாஸ்த்திரியால் வெளியிடப்பட்ட இந்நூல் குருநாதருக்கு வழங்கும் நூற்றியெட்டு பெயர்களை விளிப்பதைப் பற்றி கூறுகிறது.

குருநாதருக்கு சாஸ்தா, அய்யனார், நாதர் ஆகிய மூன்று பெயர்களும் வழங்குவதை இந்நூலின் தலைப்பின் வழி அறியலாம். சாஸ்தா புத்தரின் பெயர்களில் ஒன்றான பாலிமொழிச் சொல்லாகும். புத்தரை நாதன் என்றும் போதிநாதன் என்றும் போதிமூலத்துநாதன் என்றும் மணிமேகலை கூறுகிறது. ஸந்மார்க்கநாதன் என்று புத்தர் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறார் என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குருநாதரைக் குறிக்க சாஸ்தா, நாதர் ஆகிய டொற்கள் இடம்பெறும் வரிசையில் அய்யனார் என்ற சொல்லும் இடம்பெறுவதால் புத்தரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாக அய்யனார் என்ற சொல்லும் இடம்பெறுவதை இந்நூலின் வழி அறியலாம். மேலும், குருநாதர் என்ற பெயரும் புத்தரைக் குறிக்கும் என்பதையும் நாம் அறியலாம்.

இந்நூல் எந்தெந்த வர்ணத்தார் குருநாதரை எவ்வாறு அழைக்க வேண்டும், சடங்குகளில் எவ்வாறு கூறவேண்டும் என்று கூறுகிறது.

1. பிராமணன் - ஸ்ரீ குருநாதோ, குருநாதம்
சத்திரியன் - ஸ்ரீ சாஸ்தா, சாஸ்தாரம்
வைசியன் - ஸ்ரீ மதர்யோ, அர்யம் மம
சூத்திரன் - ஸ்ரீ நாதோ, நாதம் மம

மேலும், குருநாதரை ஜபம் செய்யும் போது ஜபே என்றும் அர்ச்சனை செய்யும்போது அர்ச்சனே என்றும் ஹோமகாலத்தில் ஹோமே என்றும் தர்ப்பண காலத்தில் தர்ப்பணே என்றும் அழைக்க வேண்டுமாம்.

அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம் இவற்றுள் எதை செய்தாலும் குருநாதரின் பெயர்களை விளித்துக் கூறும்போது ஒவ்வொரு வர்ணத்தாரும் அவரவர்க்கு உரியவற்றை சேர்த்துக் கூறவேண்டுமாம்.

பிராமணன் - ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
சத்திரியன் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
வைசியன் - ஓம் ஸ்ரீம் க்லீம்
சூத்ரன் - க்லீம் என்று கூற வேண்டுமாம்.

இறுதியாக எல்லா வர்ணத்தாரும் அர்ச்சனை செய்யும்போது நம என்றும் ஹோமம் செய்யும்போது ஸ்வாஹ என்றும் தர்ப்பணம் செய்யும்போது தர்ப்பயாமி என்றும் கூற வேண்டுமாம்.

நாதன், சாஸ்தா ஆகிய சொற்களுக்கு இணையாக அய்யனார் பெயரும் வைக்கப்பட்டுள்ளது என்பதை நூலின் தலைப்பே காட்டுகிறது. புத்தராகிய சாஸ்தாவின் பெயர்களுள் ஒன்றாக அய்யனார் என்ற பெயரும் விளங்கிவந்ததையே இந்நூல் காட்டுகிறது.

இந்நூல் குருநாதரின் பெயரை ஒவ்வொரு வர்ணத்தாரும் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்று வரையறுத்திருப்பது வருணாசிரம சிந்தனையின் வெளிப்பாடாகும். இவற்றைக் கடந்து இந்நூல் அய்யனார் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று என்பதை பதிவுசெய்துள்ளது மிக முக்கியமான குறிப்பாகும்.

No comments:

Post a Comment